Sunday, August 16, 2015

வாலு (தம்) vs வாசுவும் சரவணனும் (சரக்கு)




இந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் இரண்டு திரைப்படங்கள் வாலு மற்றும் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க. இந்த இரண்டு படங்களின் கதைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கதையை கொண்டவை கண்டதும் காதல், காதலை ஏற்காத காதலி, சந்தானத்தின் உதவியுடன் காதலை ஏற்க வைக்க போராடும் ஹீரோ முடிவில் சுபம்.

மூன்று வருட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் நடிப்பில் வெளிவந்திருக்கும் வாலு படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக ஹன்சிகா அவரது நண்பர்களாக சந்தானம் மற்றும் விடிவி கணேஷ் நடித்துள்ளனர். லவ் என்றவன் நீ யாருடா? என்றுஆரம்பித்து என்ன இழவு லவ்வுடா இது என்று பாடி முடித்து சிறிது நேரத்திலேயே ஹன்ஷிகாவை பார்த்த   முதல்பார்வையிலேயே லவ்வுகிறார் காதலை ஏற்காத ஹன்ஷிகாவை சந்தானத்தின் உதவியுடன் துரத்தி துரத்தி காதலை ஏற்க வைக்க முயல்கிறார். இடையில் அன்பான அப்பாவான நரேனின் காட்சிகள் (ஏதோ செண்டிமெண்டா சொல்ல வர்றாங்க போலன்னு நினச்சா ஒரு மண்ணும் இல்ல) ஹன்சிகாவிற்கு முறை பையனாக கோயம்பேடு மார்கெட்டில் பழம் விற்கும் வில்லன்(வில்லனா??) மற்றும் அவருடைய அடியாட்களுடன் சிம்புவை சில இடங்களில் மோத விட்டிருக்கிறார்கள். எல்லா பிரச்சனைகளையும் கடந்து முடிவில் சிம்புவும் ஹன்சிகாவும் சேருவதோடு முடிகிறது படம். படத்தில் முழு நேரமும் சிம்பு புகைப்பிடிக்கிறார் மீதி நேரம் ஹன்சிகாவை காதலிக்கிறார் மற்றும் ரவுடிகளுடன் சண்டை போட்டு வாலிபால் விளையாடுகிறார் வேறு சொல்லிகொள்ளும் படியாக எதுவும் இல்லை.


ஆர்யா, சந்தானம் மற்றும் தமன்னா நடிப்பில் ராஜேஷின் இயக்கத்தில் வந்துள்ளது வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க. சிறு வயதிலிருந்தே ஆர்யாவும் சந்தானமும் இணைப்பிரியாத நண்பர்கள் இவர்களில் சந்தானத்திற்கு பானுவுடன் திருமணம் முடிந்துவிட ஆர்யாவின் நட்பை விரும்பாத பானுவோ ஆர்யாவை பிரிந்து வந்தால் தான் நமக்கு முதலிரவு என்று கண்டிசன் போடுகிறார். ஆர்யாவை பிரிய முடியாத சந்தானமோ அவருக்கு ஒரு திருமணம் செய்து வைத்துவிட்டால் அவரே தம்மை பிரிந்து விடுவார் என்ற நம்பிக்கையில் ஆர்யாவுக்காக பெண் தேட ஆரம்பிக்கிறார். இந்த பெண் தேடும் படலத்தின் இடையே தமன்னாவை பார்த்ததுமே காதலிக்கிறார் காதலை ஏற்காத தமன்னாவை சந்தானத்தின் உதவியுடன் எப்படி காதலை ஏற்கவைக்கிறார் என்பதே மீதி கதை. படத்தில் முழு நேரமும் ஆர்யாவும் சந்தானமும் சரக்கு ஊத்தி அடிக்கிறார்கள். தன்னிடமுள்ள ஒரே சரக்கை தான் இந்த படத்திலும் உபயோகித்திருக்கிறார் இயக்குனர் ராஜேஷ் ஆனாலும் இந்த படத்திலோ சரக்கு மேலும் ஜாஸ்தி இது ஒரு சரக்கு படம் என்பதிற்காகவே விஎஸ்ஓபி என்ற சரக்கின் பெயருக்கு ஏற்றார் போல் படத்திற்கு பெயரை வைத்துவிட்டு இது யதார்த்தமாய் நடந்தது என்று எல்லோர் காதிலும் வாழைப்பூவை சுற்றுகிறார் இயக்குனர் மது ஒழிப்பு போராட்டம் தீவிரம் அடைந்திருக்கும் இந்த நேரத்தில் இந்த படத்திற்கு இதனால் எந்த சிக்கலும் வந்து விட கூடாது என்ற பயமாய் இருக்கலாம்(இது என்ன கமல் படமா தடைகள் செய்ய காரணம் தேடுவதற்கு). ஆள் இன் ஆள் அழகுராஜா படத்திற்கு பிறகு இந்த படத்திலும் மொக்கைகளையே காமேடியாக்கி இருக்கிறார், சரக்கடிதிருக்கும் இந்த வாசுவும் சரவணனும் எழுந்திருப்பது கொஞ்சம் கஷ்டம் தான்.

Thursday, August 13, 2015

இந்தியாவும் சுந்தர் பிச்சைகளும்




கடந்த மூன்று நாட்களாகவே வலைதளங்களிலும், செய்தி ஒளியலை வரிசைகளிலும் சுந்தர் பிச்சை என்ற பெயர் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் எல்லாம் இவரின் புகைப்படத்துடன் "இந்தியனாய் பிறந்ததில் பெருமை" என்ற வாசங்களோடு பல பதிவுகள் உலாவுவதை காணமுடிகிறது. நம் இந்திய பிரதமரே வாழ்த்துக்கள் சொல்லும் இந்த சுந்தர் பிச்சை யார்? நாம் பெருமை கொள்ளும் அளவுக்கு நம் தேசத்திற்கு அவர் என்ன செய்து விட்டார்??

ஆகஸ்ட் 10 2015 அன்று இந்தியரான(தமிழரான) சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கூகுள் என்பது மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஒரு இந்தியர் அதுவும் தமிழர் நியமிக்கப்பட்டிருப்பது நிச்சயம் நமக்கெல்லாம் பெருமை சேர்க்கும் விசயம் தான் என்றாலும் நம் சென்னையில் பிறந்திருந்தாலும் ஒரு அமெரிக்க குடிமகனாகவே வாழ்ந்து வரும் இவரை இந்தியாவே தலையில் தூக்கி வைத்து கொண்டாடுமளவுக்கு இவர் நம் தேசத்துக்காக எதையும் இதுவரை செய்திடவில்லை என்பதே உண்மை. கடந்த ஆண்டு 2014 இல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சத்யா நாடெல்லா நியமிக்கப்பட்ட போதும் இதே ஆர்ப்பாட்டம் தான்.

இது சுந்தர் பிச்சையின் தவறோ அல்லது சத்யா நாடேல்லாவின் தவறோ இல்லை நம் அரசாங்கத்திடமும் அதிகாரிகளிடத்தும் இருக்கிற பிழை. நம் அப்துல் கலாம் அய்யா அவர்கள் நம் இந்தியாவிலையே வெற்றி பெற்ற அளவுக்கு மற்ற திறமைசாலிகளுக்கும் வாய்ப்புகள் அமைவது என்பது நம்முடைய நாட்டில் குதிரை கொம்பு தான். 2009 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்(சிதம்பரத்தில் பிறந்தவர்) அவர்களும் "நான் இந்த தேசத்தில் பிறந்தேன் என்பது வெறும் விபத்து தான் அதில் பெருமைப்பட எதுவும் இல்லை நாமெல்லாம் மனிதர்கள்" என்று கூறியிருக்கிறார்.

மின்னஞ்சலை கண்டுபிடித்த சிவா அய்யாதுரை அவர்களோ "2008 இல் இந்திய அரசின் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு வந்து அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் கழகம்' (CSIR) என்ற அரசு நிறுவனத்தில் வேலை செய்ய வந்தேன்மூன்று மாதங்கள் இந்தியாவில் உள்ள 1500 க்கும் மேற்பட்ட இந்திய விஞ்ஞானிகளைச் சந்தித்து ஆய்வறிக்கை ஒன்றைத் தயார் செய்தேன். இங்கே அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு உரிய சூழ்நிலை நிலவவில்லை என்பதை அறிந்தேன். இங்குள்ள விஞ்ஞானிகள் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் திறனுடையவர்கள் என்றாலும் அதற்குத் தடையாகப் பல விஷயங்கள் உள்ளன. சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவில் எந்த உருப்படியான கண்டுபிடிப்புகளும் இல்லாமல் இருப்பதற்கு இந்த அமைப்பின் மேலிருந்து அமுக்குபவர்களே காரணம் என்று சொன்னேன். இது இந்தியாவில் உள்ளவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதால் அமெரிக்காவுக்குத் திரும்பிவிட்டேன்'' என்கிறார்.


இந்தியர்களாய் பிறந்து புலம் பெயர்ந்து சாதித்தவர்களின் பட்டியல் மிக நீளம் வருங்காலங்களில் அது இன்னும் நீளும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனாரின் புறநானூறு பாடல் வரிகளை வைத்து ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியது மட்டும் தான் நம்மால் முடிவது...